கண்டி மாநகர சபை எல்லைக்குள் செயல்பட்டு வரும் அனைத்து வகையான தெரு வியாபாரங்களையும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் முழுமையாகத் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
நகரின் தூய்மை மற்றும் அழகை பாதுகாப்பதுடன், பொதுமக்கள் தடையின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கு வழிவகுப்பதே இந்த முடிவின் பிரதான நோக்கமாகும் என அவர் கூறினார். இந்தத் தடை நகர மையப் பகுதிக்கு மட்டுமன்றி முழு கண்டி மாநகர சபை எல்லைக்குள்ளும் அமுல்படுத்தப்படும் என்றும் மேயர் விளக்கினார்.
நகர்ப்புறப் பகுதிகளில் ஒழுங்கான கட்டமைப்பு மற்றும் சீரான நிர்வாகம் அமைய வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முடிவு எந்த மாற்றங்களுமின்றி கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என வலியுறுத்தியதுடன் இதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு அவர்களின் வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறு கண்டி மாநகர சபை அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஏற்கனவே வழங்கியுள்ளதாக கூறினார்.
மேலும் வியாபாரிகள் மாற்று இடங்களுக்கு இடம்பெயருவதற்காக வழங்கப்பட்ட மூன்று மாத கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.