(அட்டாளைச்சேனை செய்தியாளர்- றிஸ்வி)
“கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” எனும் தொனிப்பொருளில் மக்கள் காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் செயற்பாட்டினை அட்டாளைச்சேனையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எஸ்.உதுமாலெப்பை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின் அடிப்படையில் அட்டாளைச்சேனை அல்முனீறா வட்டார பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் பிரதேச சபை கெளரவ உறுப்பினர் ரியா மசூர் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று (27.12.2025) அட்டாளைச்சேனை சரா பீச் ரிசோட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளர் றியா மசூர், ஏ.எல். பாயிஸ், எம்.எல்.கலீல்(Ex.MPS) மற்றும் அல்-முனீரா வட்டார கிளைக்குழு தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
வட்டார மக்களின் குரலை நேரடியாக கேட்டு அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் இவ்வகை சந்திப்புகள் தொடர்ச்சியாக வட்டார ரீதியாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.





