Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஸொஹாரா புஹாரி கட்சியிலிருந்து இடைநீக்கம்

Posted on December 31, 2025 by Admin | 240 Views

முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். ஸொஹாரா புஹாரி கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பரின் கையொப்பத்துடன் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கட்சித் தலைமை எடுத்த தீர்மானத்தை மீறி அதற்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வரவுசெலவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுக் கூட்டத்தில் நேரடியாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு முரணாக ஸொஹாரா புஹாரி செயற்பட்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சித் தலைவரின் நேரடி அறிவுறுத்தல்களை மீறி செயற்படுவது கட்சியின் ஒழுக்கத்திற்கு கடுமையான மீறலாகக் கருதப்படுவதாகவும் இதன் அடிப்படையிலேயே இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் சத்தியக்கடதாசி மூலம் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கத் தவறினால் கட்சியின் உறுப்புரிமையை நிரந்தரமாக ரத்து செய்வது உள்ளிட்ட மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எச்சரிக்கையின்றி மேற்கொள்ளப்படும் எனவும் கட்சி எச்சரித்துள்ளது.