இலாபம் ஈட்டும் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) டிப்போக்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், நட்டம் அடையும் டிப்போக்களின் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க ஆகியோர் நேற்று (31) பிற்பகல் நாவலப்பிட்டி இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.
அவ்விஜயத்தின் போது, அரசாங்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என டிப்போ ஊழியர்கள் பிரதி அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். இதனைத் தொடர்ந்து அவர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், நாவலப்பிட்டி டிப்போவில் தற்போது காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் அதன் பின்னர் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.