Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

இலங்கை முழுவதும் கனமழைக்கு எச்சரிக்கை

Posted on January 6, 2026 by Admin | 206 Views

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுப்பெறும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் மேற்கு–வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தால் ஜனவரி 8ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை மேலும் தீவிரமடையும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மாகாணம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை நேரங்களில் ஏற்படக்கூடிய திடீர் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளில் கொந்தளிப்பு

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக மாத்தறை வரை உள்ள கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் உள்ளது.

கடற்பரப்புகளில் காற்று பொதுவாக வடகிழக்குத் திசையிலிருந்து வீசக்கூடும். அதன் வேகம் மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீற்றராக இருக்கும். பேருவளையிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக மாத்தறை வரை உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரை உள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 முதல் 3.0 மீற்றர் உயரம் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (இது கரையை அடையும் அலைகளின் உயரம் அல்ல.)