ரஷ்யக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தடைப் பட்டியலில் உள்ள கப்பல்களை ஆய்வு செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முதலில் ‘பெல்லா 1’ என்ற பெயரில் அறியப்பட்ட அந்த டேங்கர், வெனிசுலாவுக்குப் பயணிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அமெரிக்கக் கடற்படைக் கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக தனது பயணப் பாதையை மாற்றியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். பின்னர் அந்தக் கப்பல் தனது பெயரை ‘மரினேரா’ என மாற்றி ரஷ்யக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள ஒரு ரஷ்ய துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தக் கப்பல் அமெரிக்க இராணுவத்தின் காவலில் எடுக்கப்பட்டதாக கடற்படை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெனிசுலா, ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து எண்ணெய் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் ‘கோஸ்ட்’ (shadow) கடற்படையின் ஒரு பகுதியாக இந்த டேங்கர் செயல்பட்டதாகவும் அமெரிக்க தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.