மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து நாட்டில் சிலர் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவையற்ற அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் கலன்கள் மற்றும் பிற கொள்கலன்களில் எரிபொருளை சேமித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டிற்குத் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு இருக்கத் தேவையில்லை என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் சில தரப்பினரால் திட்டமிட்டு எரிபொருள் சேகரிப்பு மேற்கொள்ளப்படுவதால் அத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்காலிக வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. மீள் அறிவிப்பு வரும் வரை அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து கலன்கள், போத்தல்கள் அல்லது பிற கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், வேலைத்தளங்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டு தேவைகள் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கே இவ்விதிவிலக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எரிபொருளை தேவையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி அதிக விலையில் விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக போலித் தகவல்கள் பரப்பும் நபர்கள் மற்றும் குழுக்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் தயாராக உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.