Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு

Posted on March 17, 2026 by Admin | 326 Views

அரசுத் துறைகளில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரச விடுமுறை நாளாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதை அறிவித்தார்.

தற்போது போதுமான அளவில் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இருந்தாலும், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சாத்தியமான நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

சுகாதாரம், நீர்வழங்கல், மின்சாரம் மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைத் துறைகளுக்கு இந்த விடுமுறை நடைமுறை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாடசாலைகள், நீதிமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை மற்றும் ஏனைய அனைத்து அரசாங்க பணியாளர்களுக்கும் இந்த விடுமுறை நடைமுறை அமலில் இருக்கும் என கூறப்பட்டது.

மேலும், மீதமுள்ள நான்கு வேலை நாட்களில் பணிக்கு அழைக்கப்பட வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், அரசாங்கம் ஏற்பாடு செய்யும் பல்வேறு நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் தனியார் துறையும் கவனம் செலுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனுடன், சுற்றுலா, விவசாயம், சுகாதாரம் மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் எரிபொருள் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப கூடுதல் எரிபொருள் ஒதுக்கீடுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.