Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு

Posted on March 18, 2026 by Admin | 508 Views

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையில் ஏற்பட்டிருந்த பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இம்முறைமையின் கீழ் இதுவரை நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெற்றிகரமாக QR குறியீட்டைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

பதிவு செய்யும் போது ‘Error’ அல்லது ‘Inactive’ போன்ற சிக்கல்களை எதிர்கொண்டவர்கள், தற்போது முறைமை சீரமைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் முயற்சிப்பதன் மூலம் எளிதில் பதிவை நிறைவு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முறைமையில் இருந்த சுமார் இரு மில்லியன் பழைய தரவுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் வார இறுதியில் புதிய ஒதுக்கீட்டு (Quota) திட்டம் ஆரம்பமாக உள்ளதால் அதற்கு முன் QR பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

வாகனப் பதிவுச் சான்றிதழ் (CR) சரிவரப் புதுப்பிக்கப்படாதவர்களுக்கு QR குறியீடு பெறுவதில் இன்னும் சிக்கல்கள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

அந்த இலக்கங்களுக்கு அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை WhatsApp மூலம் அனுப்புவதன் மூலம் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு QR குறியீட்டை பெற வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மணித்தியாலமும் சுமார் 30,000 பேர் புதிதாக பதிவு செய்து வருவதால் தற்காலிக தாமதங்கள் ஏற்படக்கூடும். எனினும், தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.