Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

போலி இணையத்தளங்கள் மூலம் QR குறியீடு மோசடி

Posted on March 19, 2026 by Admin | 2049 Views

எரிபொருள் நிரப்ப QR குறியீட்டைப் பெறுவதற்காக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் வழியாக மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுகின்றன என டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் “வாகன உரிமையாளர்கள் மாறிய தரவுகளை நாம் முறைமையிலிருந்து நீக்கியுள்ளோம். அதேபோல் வாகனம் கைவசம் இருந்தும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கம் கைவசம் இல்லாத சுமார் 12 இலட்சம் தரவுகளையும் நீக்க வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு புதிய QR குறியீட்டைப் பெற முடியாது.

இந்நேரம் வரை சுமார் 55 இலட்சம் பேர் QR குறியீட்டைப் பெற்றுள்ளதாகவும் தற்போது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கம் இல்லாத உண்மையான வாகன உரிமையாளர்கள் புதிய தொலைபேசி இலக்கத்தின் மூலம் உள்நுழைந்து தங்களது வாகனத் தகவல்களை புதுப்பிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி, பழைய தரவுகள் மாற்றப்பட்டு உரிய உரிமையாளர்களின் பெயரில் புதுப்பிக்கப்படும் என்றும் இதற்காக உரிமை உறுதிப்படுத்தல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் பிறரின் QR குறியீட்டை இரத்து செய்து தவறாக பயன்படுத்தும் செயல்கள் கணினி குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இதற்கிடையில் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வாகனங்களின் செஸி இலக்கங்களை சேகரிக்க ஐந்து முதல் ஆறு வரை போலி இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சந்தேகமான இணைய இணைப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் லிங்குகள் மூலம் தரவுகளை வழங்காமல் அதிகாரப்பூர்வ இணையத்தளமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.