Top News
| உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின | | காலி ரயில் நிலையத்தில் பற்றி எரியும் ரயில் பெட்டிகள் | | நீர் வெட்டு தொடர்பாக வெளியான அறிவிப்பு |
Apr 1, 2026

ஈரான் மீதான தாக்குதலை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்

Posted on March 23, 2026 by Admin | 170 Views

அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றநிலைக்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டிருந்த திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில் அமெரிக்கா ஈரானின் மின் விநியோக அமைப்புகளைத் தாக்கினால் பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்களும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிலையங்களும் குறிவைக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இவ்வாரம் முழுவதும் தொடரும் என்றும் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தைப் பொறுத்து, எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

அதேவேளை கடந்த வாரம் வரை ஈரானுடன் போர்நிறுத்தத்திற்கு விருப்பமில்லை என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. “பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் போர்நிறுத்தத்திற்கு விருப்பமில்லை” என அவர் அப்போது தெரிவித்திருந்தார்.