புத்தாண்டு காலத்தை முன்னிட்டு சந்தையில் கோழி இறைச்சி தட்டுப்பாடு ஏற்படாதவாறு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால் கோழி இறைச்சி விலை உயரக்கூடிய அபாயம் காணப்பட்டாலும் அதை கிலோவிற்கு ரூ.1,250 அளவில் பேண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டார்.
இதேவேளை உலக சந்தையில் விலங்கு தீவனங்களின் விலை அதிகரித்திருப்பதும் உற்பத்திச் செலவுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் விளக்கமளித்த அவர், ஏப்ரல் மாதத்தில் அனைத்து பண்ணைகளும் தங்களின் அதிகபட்ச உற்பத்தி திறனை பயன்படுத்தும் என்றும் இறைச்சி மற்றும் முட்டை விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாப்பதே முக்கிய இலக்காக உள்ளதாகவும் கூறினார்.
ஆனால் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதுடன் அதனை உற்பத்தியாளர்கள் தாமே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் சூழலில் அதற்கேற்ப விநியோகத்தை பேணுவது சவாலாக இருக்கலாம் என்றும் விலையை நிர்ணயிப்பது சந்தை நிலைமைகளே எனவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்பட்டால் போக்குவரத்து செயல்முறை சீர்குலையும் அபாயம் உள்ளதாகவும் அதனால் எதிர்கால நிலைமைகள் குறித்து உறுதியான கணிப்பை வழங்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.