Top News
| முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு தெரிவு | | எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளர் திடீர் ராஜினாமா | | கச்சா எண்ணெய் கப்பல் இன்று இலங்கைக்கு வருகை |
Apr 18, 2026

ஈரான் மீது அமெரிக்கா தீட்டிய சதித்திட்டம் அம்பலம்

Posted on April 7, 2026 by Admin | 215 Views

ஈரானில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து அமெரிக்காவின் சூழ்ச்சி தொடர்பாக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. போராட்டங்களின் போது ஈரானிய எதிர்ப்புக் குழுக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியதாக முதன்முறையாக வெளிப்படையாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஊடகமான ஃபொக்ஸ் நியூஸ் செய்தியாளர் ட்ரே யிங்ஸ்டுக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் இந்த தகவலை அவர் வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஈரானிய போராட்டக்காரர்களுக்கு பெருமளவில் துப்பாக்கிகள் வழங்கப்பட்டதுடன் அவை குர்து இனக் குழுக்களின் வழியாக அனுப்பப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பே அந்நாட்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா நேரடி முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஐரோப்பாவில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் இடையே இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் இவ்வாறான ரகசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப் போர் 38-வது நாளை எட்டியுள்ள நிலையில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,076 ஆக உயர்ந்துள்ளதாகவும், 26,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் “ஈரானில் இடம்பெற்ற போராட்டங்கள் வெளிநாட்டு ஆதரவுடன் தூண்டப்பட்டவை” என்ற அந்த நாட்டின் நீண்டகால குற்றச்சாட்டுக்கு ட்ரம்பின் இந்த கருத்து வலுசேர்த்துள்ளதாக பார்க்கப்படுகிறது. எனினும் ட்ரம்பின் கருத்துக்கள் பல்வேறு தருணங்களில் மாறுபட்டு வந்துள்ளதால் அமெரிக்காவின் நேரடி தலையீட்டின் அளவைத் தெளிவாக உறுதிப்படுத்துவது சவாலாகவே உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.