அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களை நிரந்தர சேவைக்கு உட்படுத்தும் நோக்கில் 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இச்சுற்றுநிருபம் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்படி அமைக்கப்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இத்தீர்மானத்தின் மூலம் சுமார் 9,800 ஊழியர்களுக்கு நிரந்தர நியமன வாய்ப்பு கிடைக்க உள்ளதாக தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் தற்போது அரச நிறுவனங்களில் தற்காலிக, பதில், ஒப்பந்த மற்றும் நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர்.
ஏற்கனவே நிவாரண அடிப்படையில் பணியாற்றி சுற்றுநிருப விதிகளின்படி நிரந்தர நியமனம் பெற்றிருந்தாலும் அவை இதுவரை முறையாகச் சட்டபூர்வமாக்கப்படாத ஊழியர்களின் நியமனங்களை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.