Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களாக பாராளுமன்றத்தில் தங்களை அங்கீகரிக்க கோரிக்கை

Posted on May 5, 2026 by Admin | 206 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் ஆகியோர் தங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட SC Writ Application No. 70/2025 என்ற மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. தங்களை பாராளுமன்ற கட்டமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களாக அங்கீகரிக்க உத்தரவு வழங்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது பல முக்கிய அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியவற்றுக்கிடையிலான அரசியல் கூட்டணி தொடர்பான விவரங்களுடன் ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எனும் தகவல் ஏற்கனவே பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தேவையான அனைத்து தகவல்களும் முன்னதாகவே பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணை தேவையில்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து மனுவில் கோரப்பட்ட நிவாரணம் நடைமுறையில் கிடைத்துவிட்டதாகக் கருதி வழக்கை தொடர்ந்து பரிசீலிக்க அவசியமில்லை என நீதிமன்றம் தீர்மானித்ததுடன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தலைத் தொடர்ந்து ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் ஆகியோர் இன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.