Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

அம்பாறை மாவட்ட தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு நிரந்தர மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி விரைவில் நியமனம்

Posted on May 7, 2026 by Admin | 137 Views

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழி பேசும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி விரைவில் நிரந்தரமாக நியமிக்கப்படுவார் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று (07.05.2026) கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியபோது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரிடம் வாய்மூல கேள்வி எழுப்பினார்.

இதன்போது அம்பாறை மாவட்ட தமிழ் மொழிப் பிரதேசங்களுக்காக தற்போது தற்காலிகமாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நியமிக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்ததுடன் குறித்த பதவி நிரந்தரமாக வழங்கப்படுமா என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தற்போது நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அம்பாறை மாவட்ட தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கான நிரந்தர மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே அம்பாறை மாவட்டத்தில் 13 விளையாட்டு உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட உதுமாலெப்பை எம்.பி. அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு இதுவரை விளையாட்டு உத்தியோகத்தர் நியமிக்கப்படாததால் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாமல் நேரடியாக மாவட்ட மட்டப் போட்டிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியதுடன் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அவர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பல மாவட்டங்களில் விளையாட்டு உத்தியோகத்தர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நிரப்புவது மாகாண சபைகளின் பொறுப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் விளையாட்டுப் போட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் விரைவில் கலந்துரையாடி தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.