Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பொன்னன்வெளியில் காணி இழந்த விவசாயிகளுக்கு 38 ஏக்கர் காணி கிடைக்கின்றது

Posted on June 11, 2026 by Admin | 171 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொன்னன்வெளிக் கண்டத்தில் கடந்த 1982ஆம் ஆண்டு காணி இழந்த முஸ்லிம் விவசாயிகளுக்குப் பகரமாக பால்கேணி வட்டையில் முதற்கட்டமாக 38 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் பேராசிரியர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை விடுத்த வேண்டுகோளுக்கமையவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1982ஆம் ஆண்டில் பொன்னன்வெளிக் கண்டம் தீகவாபி புனித பூமியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விவசாயம் செய்து வந்த 200 முஸ்லிம் விவசாயிகள் தமது சொந்தக் காணிகளை இழந்தனர். இவர்களுக்கான மாற்று நிலங்களை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை காணி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்திருந்தார். இதன்போது வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள பால்கேணி வட்டைப் பகுதியை விடுவித்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பதில் காணிகளை வழங்க முடியும் என காணி அமைச்சின் செயலாளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் குறித்து சுற்றாடல் அமைச்சின் கூட்டத்தில் விரிவாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, பொன்னன்வெளியில் காணி இழந்த 200 விவசாயிகளும் அதற்கான சட்டபூர்வ உத்தரவுப் பத்திரங்களை வைத்துள்ளனர் என்றும் தமக்குரிய மாற்று நிலம் கிடைக்காமலேயே அவர்களில் பலர் மரணித்துவிட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும், வனப்பாதுகாப்புத் திணைக்கள விசேட கூட்டத்திலும் முதற்கட்டமாக பால்கேணி வட்டையில் 38 ஏக்கரை விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட போதிலும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளரினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். எனவே, முதற்கட்டமாக இக்காணியை விடுவித்து, பாதிக்கப்பட்ட ஏனையோருக்கும் பொருத்தமான நிலங்களை வழங்க திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சுற்றாடல் அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாகப் பதிலளித்த வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர், பால்கேணி வட்டையில் உள்ள காணிகளில் 20 ஏக்கர் காணி குத்தகை அடிப்படையில் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எஞ்சியுள்ள 38 ஏக்கர் காணியை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கான உத்தியோகபூர்வ கடிதம் விரைவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நீண்டகாலமாகப் இழுபறியிலிருந்த இந்த நிலப் பிரச்சினைக்குச் சாதகமான தீர்வைப் பெற்றுத்தந்த சுற்றாடல் அமைச்சர் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.