Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

எல்-நினோ காலநிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் அவசர ஆலோசனை!

Posted on June 11, 2026 by Admin | 93 Views

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை திட்டங்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் வளிமண்டலவியல், நீர்ப்பாசனம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகளாவிய ரீதியில் உருவாகி வரும் எல்-நினோ நிலைமையால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் மின்சார உற்பத்தி ஆகிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, தற்போதுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பைக் கொண்டு விவசாயம், குடிநீர் மற்றும் மின் உற்பத்தித் தேவைகளை சமநிலைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இம்முறை ஏற்படும் எல்-நினோ தாக்கமானது 2016-2017 ஆண்டுகளில் நிலவிய கடுமையான வறட்சிச் சூழலுக்கு நிகரானதாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனை எதிர்கொள்ள பிரத்யேக நீர் முகாமைத்துவத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், இதன் ஒரு கட்டமாக 2026 ஆம் ஆண்டின் சிறுபோக விவசாய நடவடிக்கைகளை திட்டமிட்ட காலத்திற்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பதாகவே ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

எதிர்வரும் மாதங்களில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், உணவுப் பாதுகாப்பைப் பேணுதல் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றுக்கான முறையான திட்ட வரைபுகளை உடனடியாகத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். ‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழல் போன்ற சவால்களை நாடு வெற்றிகரமாக எதிர்கொண்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் இந்த உலகளாவிய காலநிலை சவாலையும் நம்மால் திறம்பட முகாமைத்துவம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.