Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனையே வியந்து பார்க்கும் அறபா வித்தியாலயத்தின் இமாலய வெற்றி

Posted on June 22, 2026 by Admin | 671 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஹபீஸ்)

தற்போது வெளியாகியுள்ள 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அறபா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது.

தமிழ், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்கள் உள்ளடங்களாக ஆறு பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் அடைவு மட்ட விகிதாசாரத்தின்படி அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளிலேயே அறபா வித்தியாலயம் முதனிலையைப் பெற்று இப்பிரதேசத்திற்கு பெரும் பெருமை சேர்த்துள்ளது.

இப்பரீட்சை முடிவுகளின்படி, அறபா வித்தியாலயம் 81.5% சித்தி வீதத்தைப் பெற்று முதலிடத்தைத் தனதாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷஹ்ரா வித்தியாலயம் 80.00% பெற்று இரண்டாம் இடத்தையும், அல்முனீறா பெண்கள் உயர் பாடசாலை 74.1% பெற்று மூன்றாம் இடத்தையும், அல் அர்ஹம் வித்தியாலயம் 66.7% பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுள்ளன. மேலும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை 60.1% சித்தி வீதத்துடன் ஐந்தாம் இடத்தையும், அந் நூர் மகா வித்தியாலயம் 60.00% பெற்று ஆறாம் இடத்தையும், கரடிக்குளம் றஹ்மானியா வித்தியாலயம் 57.1% பெற்று ஏழாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

அறபாவின் இந்த உன்னத சாதனையானது வெறும் எண்களால் ஆன புள்ளிவிவரம் மட்டுமல்ல. இது பாடசாலை சமூகத்தின் கூட்டு உழைப்பிற்கும், இதயப்பூர்வமான அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த மகுடமாகும். இத்தகையதொரு இமாலய வெற்றியை நோக்கிப் பாடசாலையை வழிநடத்திய அதன் அதிபரின் தூரநோக்குடன் கூடிய நிர்வாகத் திறமையும், வழிகாட்டுதலும் இங்கு பலராலும் போற்றப்பட்டு வருகின்றன.

பரீட்சை நெருக்கடி மிகுந்த காலப்பகுதிகளில் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்காக அதிபர் மேற்கொண்ட முறையான திட்டமிடல்களும், இரவு பகல் பாராத அன்பான கண்காணிப்புகளும் இந்த வெற்றியின் பின்னணியில் உள்ள முக்கிய தூண்களாகக் கருதப்படுகின்றன.

வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு அப்பால், மாணவர்களின் தனித்திறமைகளை இனம் கண்டு, பின்தங்கிய மாணவர்களுக்கென விசேட மேலதிக வகுப்புகளை நடாத்தி, அவர்களைக் கல்வியில் மிளிரச் செய்த அதிபர் , பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடின உழைப்பும், தியாகமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. ஒவ்வொரு மாணவனையும் தனது சொந்தப் பிள்ளையாகக் கருதி அவர்களின் பலவீனங்களை இனங்கண்டு, அன்போடும் பொறுமையோடும் கல்வியூட்டிய ஆசிரியர்களின் இந்த சேவை ஒரு உன்னதமான ஆன்மீகப் பணியாகும். அவர்களின் அயராத உழைப்பே இந்த வரலாற்றுச் சாதனையின் அச்சாணியாகத் திகழ்கிறது.

மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஆசிரியர்களோடு கைகோர்த்து நின்று வீடுகளிலும் அவர்களுக்கு உகந்த, அமைதியான கற்றல் சூழலை உருவாக்கி பாடசாலையின் ஒவ்வொரு கல்விசார் செயல்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பெற்றோர்களினதும், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்களினதும் அர்ப்பணிப்பும் இந்த வரலாற்றுச் சாதனையில் பிரிக்க முடியாத பங்கினை வகிக்கின்றது.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல்களைச் சிரமேற்கொண்டு அவர்களின் ஆலோசனைகளை வேதவாக்காக ஏற்று முறையான கால அட்டவணைகளைப் பின்பற்றி ஓயாத முயற்சியுடனும் தளராத தன்னம்பிக்கையுடனும் கல்வி கற்ற மாணவர்களின் அயராத உழைப்பே இன்று அறபா வித்தியாலயத்தை வலய மட்டத்தில் தலைநிமிரச் செய்துள்ளது.

கல்வியில் மாத்திரமன்றி, மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களையும் பேணி ஒரு முன்மாதிரியான கல்வி நிறுவனமாகத் திகழும் அறபா வித்தியாலயம் தனது அர்ப்பணிப்புமிக்க அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் எதிர்காலத்திலும் இத்தகைய பல சாதனைகளைப் படைத்து கல்விப் பரப்பில் இன்னும் பல உயரங்களைத் தொடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.