Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக கட்டுமான பணிகளை விரைவுபடுத்த உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

Posted on June 22, 2026 by Admin | 157 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

பொத்துவில் மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தின் எஞ்சிய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை விடுத்த கோரிக்கையை அடுத்து அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டம் அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, பொத்துவில் பிரதேச விவசாயிகளின் நன்மையைக் கருத்திற்கொண்டு இந்தத் திட்டத்தை முழுமைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ், பொத்துவில் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்திற்கான இரண்டு மாடிக் கட்டிட நிர்மாணிக்கும் வேலைகள் கடந்த 2012ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டன. இதற்கென கிழக்கு மாகாண சபையினால் 17.48 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், நீண்ட தாமதத்திற்குப் பின்னர் 2025ஆம் ஆண்டிலேயே இதன் முதலாம் மாடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொத்துவில் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் முழுமையாகச் செயற்பட்டு மக்களுக்குப் போதிய சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக அதன் எஞ்சிய பணிகளையும் விரைவாகப் பூர்த்தி செய்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மக்கள் சார்பில் அமைச்சரிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் இந்தக் கோரிக்கையை அடுத்து, பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தின் எஞ்சிய பணிகள் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையின் விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் மேலதிக செயலாளருக்கு அமைச்சர் அபேரத்ன உடனடியாகப் பணிப்புரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து விபரங்களை வெளியிட்ட அமைச்சின் மேலதிக செயலாளர், பொத்துவில் பிரதேசத்திலுள்ள நாவுல மற்றும் செம்மணிகுளப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்களுக்கும் பொதுமக்களுக்கும் முறையான, திறமையான சேவைகளை வழங்குவதற்கு இந்த அலுவலகம் அத்தியாவசியமானது என மாகாண பிரதம செயலாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுவரை முதலாம் மாடி மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் எஞ்சிய கட்டுமானப் பணிகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு மேலும் 20 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கேட்டறிந்த அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, இந்தத் திட்டம் குறித்து அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.