Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அசாத்திய கல்விப் புரட்சி – அகில இலங்கையில் 2ஆம் இடத்தைப் பிடித்தது

Posted on June 26, 2026 by Admin | 141 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

கல்விப்புலத்தில் புத்தொளி பாய்ச்சி புதியதோர் மங்கலச் சரித்திரம் படைத்து ஒட்டுமொத்தத் தேசத்தின் விழிகளையும் வியப்போடு தன்வசம் திருப்பியிருக்கின்றது எழில் கொஞ்சும் அக்கரைப்பற்று கல்வி வலயம்.

அண்மையில் வெளியான 2025(2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் முதன்மைச் சிம்மாசனத்தை அலங்கரித்ததோடு மட்டுமன்றி அகில இலங்கை ரீதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் இடத்தையும் தன்வசமாக்கி இவ்வலயம் நிகரற்றதொரு மாபெரும் சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இந்த இமாலயப் புகழுடன் மிளிரும் இந்த அரிய மகுடமானது வலயத்தின் தீர்க்கதரிசனம் மிக்க திட்டமிடல்களுக்கும், அர்ப்பணிப்பு, கூட்டுமுயற்சி ஆகியவற்றிற்கு கிடைத்த ஆகச்சிறந்த வெற்றிக் கனியாகும்.

இந்த வரலாற்றுப் பெருமிதத்தின் பின்னாலுள்ள அடிநாதமாக அண்மையில் ஓய்வுபெற்ற முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். ரஹ்மதுல்லாஹ் அவர்களின் வழிகாட்டலும், சீரிய நிர்வாகத் திறனும் உறைந்திருக்கின்றன. கல்வியை வெறும் ஏட்டுச்சுரக்காயாகப் பார்க்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை வடித்தெடுக்கும் உளியாகக் கருதி அவர் ஆற்றிய அர்ப்பணிப்புடன் கூடிய பணிகள் இந்த வெற்றிக்கான விதைநெல்லைத் தூவின என்றால் அது மிகையாகாது. அவருடன் தோளோடு தோள் நின்று அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம். எம். சித்தி பாத்திமா அவர்கள் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் புதிய உத்திகளையும், நவீன கற்பித்தல் நுட்பங்களையும் புகுத்தி, மாணவர்களின் அடைவு மட்டத்தை சிகரத்தை நோக்கி நகர்த்துவதற்காகப் பகிரீதப் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார்.

முன்னாள் வலயக் கல்வி பணிப்பாளரது ஆளுமைமிக்க தலைமைத்துவத்தின் கீழ் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பெளஸ் மற்றும் ஏனைய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.ஜி.பஸ்மில், ஏ.எம்.ஹஸீன், ஏ.எல்.ஏ.மஜீத் ஆகியோரின் முறையான கண்காணிப்பும், கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களின் ஒருமித்த இலக்குடன் கூடிய உழைப்பும் வலயத்தை வெற்றிக்கொடி நோக்கிச் செலுத்த உதவின. காலநேரம் பாராது, இராப்பகலாக அவர்கள் ஆற்றிய கூட்டு உழைப்பு இன்று வெற்றிக்கனியாகக் கனிந்து நிற்கிறது.

இந்த வெற்றிக் கனியைத் தன்வசமாக்கி அதன் முழுமையான களிப்பை தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் வை. அறபாத் முகைதீன் அவர்களின் சீரிய ஆளுமையின் கீழ் முழு அக்கரைப்பற்று கல்வி வலயமும் இன்று பெருமிதத்துடன் சுவைத்துக் கொண்டிருக்கின்றது.

வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகப் பங்களிப்பானது களத்தில் நின்று போராடிய அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் அரணாக, பக்கபலமாக அமைந்திருந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இவ்வுயரிய சாதனையின் உண்மையான கதாநாயகர்களாக, களப்பணியாளர்களாகத் திகழ்வது பாடசாலைகளின் அதிபர்களும், அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுமே ஆவர்.

வழக்கமான வகுப்பறைக் கற்பித்தலையும் தாண்டி இரவு நேரக் கற்றல் செயற்பாடுகள், விசேட மீட்டல் பயிற்சிகள் மற்றும் மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கிய உளவியல் ரீதியான ஆலோசனைகள் என இவர்களின் தியாகம் அளவிடற்கரியது. இவர்களின் உன்னத அர்ப்பணிப்புக்குத் தோள் கொடுத்து பிள்ளைகளின் கல்வியில் அனுதினமும் அக்கறை காட்டிய பெற்றோர்களின் அளப்பரிய ஒத்துழைப்பும், அனைத்து சவால்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு தங்களின் அசாத்திய திறமைகளைத் துல்லியமாக வெளிப்படுத்திய மாணவச் செல்வங்களின் விடாமுயற்சியுமே தேசத்தின் உச்சியில் இந்த வலயத்தை ஏற்றி வைத்து அழகு பார்க்கிறது.

கிழக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் என்றும் அழியாத பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்த அக்கரைப்பற்றின் கல்விப் பாரம்பரியத்தை உலகறியச் செய்த முன்னாள், இந்நாள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பரீட்சையில் தோற்றி சாதனைச் சிகரத்தை எட்டிப்பிடித்த மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சமர்ப்பணமாகட்டும்.