Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனையை சேர்ந்த சஜீத் அகமட் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்

Posted on June 26, 2026 by Admin | 191 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- அப்ரித்)

அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இளம் சாதனையாளர் அப்துல் மஜீட் சஜீத் அகமட் இலங்கை உயர்நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக நேற்று (25.06.2026) பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கல்வி, தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை என பன்முக ஆளுமைகளுடன் மிளிரும் இவரது இந்த உயரிய சாதனை அட்டாளைச்சேனை மண்ணுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரும் பெருமிதத்தைத் தேடித்தந்துள்ளது.

தனது ஆரம்பக் கல்வியிலும் உயர் கல்வியிலும் தொடர்ச்சியான சாதனைகளைப் படைத்து வரும் சஜீத் அகமட் ஒரு பன்முகக் கல்விப் பின்னணியைக் கொண்டவராகத் திகழ்கிறார்.

தொழில்நுட்பத் துறையில் கொண்ட ஈடுபாட்டினால் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை தகவல் தொழில்நுட்பத் துறையில் (B.Sc. in Management Information Technology) தனது முதலாவது இளங்கலைப்பட்டத்தை 2016ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் உலகளாவிய ரீதியில் தனது தொடர்பாடல் மற்றும் ஆளுமையை விரிவுபடுத்தும் நோக்கில் அதே பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலமான டிப்ளோமா (Diploma in English) கற்கையினையும் 2025ஆம் ஆண்டு வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தார்.

தொழில்நுட்பத் துறையோடு நின்றுவிடாது சமூக நீதிக்காகவும் சட்ட ஒழுங்குக்காகவும் குரல் கொடுக்கும் உன்னத நோக்கோடு சட்டத்துறையையும் தனது இலக்காகத் தேர்ந்தெடுத்தார். இதற்கமைய இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி (LLB) பட்டத்தை 2024ஆம் ஆண்டு நிறைவு செய்ததுடன் இலங்கை சட்டக்கல்லூரியின் இறுதிப் பரீட்சைகளிலும் மிகச்சிறந்த முறையில் சித்தி பெற்றார். கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் சான்றாக நேற்று கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் சட்டத்தரணியாக (Attorney-at-Law) தனது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டு சட்டத் தாரகையாக தடம் பதித்துள்ளார். கற்பித்தல் மற்றும் கல்வித்துறையின் மீதான ஆர்வத்தின் காரணமாக தேசிய கல்வி நிறுவனத்தில் (NIE) கல்வியியலுக்கான முதுகலை டிப்ளோமா (PGDE) கற்கையினை 2025ஆம் ஆண்டு மேதகைமை சித்தியுடன் (Merit Pass) பூர்த்தி செய்து தனது திறமையை மீளவும் நிரூபித்தார். தற்போதைய நவீன உலகிற்கு அவசியமான தகவல் தொழில்நுட்பத் திறனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் அவர் தற்போது ஆங்கில மொழிமூல தகவல் தொழில்நுட்ப ஆசிரியராகவும் (English Medium ICT Teacher) கடமையாற்றி சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு அரிய பங்களிப்பை வழங்கி வருகிறார்.

கடினமான உழைப்பு, முறையான திட்டமிடல் மற்றும் தளராத விடாமுயற்சி இருந்தால் ஒரே நேரத்தில் பல துறைகளிலும் உச்சத்தைத் தொட முடியும் என்பதற்கு சட்டத்தரணி அப்துல் மஜீட் சஜீத் அகமட் அவர்களின் இந்த வெற்றிகரமான பயணம் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். கல்வியிலும் கற்பித்தலிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து இன்று சட்டத்துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ள அவர் எதிர்காலத்தில் ஏழை எளிய மக்களின் நீதிக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் தனது சட்டப் பணியினை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டும் என வாழ்த்துகிறோம். தனது கடின உழைப்பால் இன்றைய இந்த உயரிய மகுடத்தைச் சூடியுள்ள சட்டத்தரணி சஜீத் அகமட் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.