Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

தேசிய அளவில் 4வது இடத்தினைப் பெற்று திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை

Posted on June 26, 2026 by Admin | 111 Views

(திருக்கோவில் செய்தியாளர் – நாகேஷ்)

க.பொ.த. (சாதாரண தர) 2025 (2026) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் திருக்கோவில் கல்வி வலயம் தேசிய ரீதியிலும் மாகாண ரீதியிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள 100 கல்வி வலயங்களுக்கு மத்தியில் தேசிய மட்டத்தில் 4ஆம் இடத்தை சுவீகரித்து கல்வித் துறையில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை இந்த வலயம் பதித்துள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயங்களுக்கு இடையிலான தரவரிசையில் 3ஆம் இடத்தை தமதாக்கிக் கொண்டுள்ளதோடு பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் மாறியுள்ளது.

இம்முறை வலயத்தின் ஒட்டுமொத்த பெறுபேறுகளும் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. வலயத்தைச் சேர்ந்த 33 திறமைமிக்க மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் மேலாக ஒட்டுமொத்த வலயத்திலும் ஒரேயொரு ‘9W’ (அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாமை) பெறுபேறு மட்டுமே பதிவாகியுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலேயே மிகக் குறைந்த தோல்வி வீதத்தைக் கொண்ட கல்வி வலயாக திருக்கோவில் வலயம் புதியதொரு சாதனையைப் படைத்துள்ளது.

இது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களின் கற்றல் திறனையும், எவரையும் கைவிடாமல் அரவணைத்துச் சென்ற வலயத்தின் திட்டமிடலையும் வெளிப்படுத்துகிறது.

கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தில் நீடித்த திருக்கோவில் கல்வி வலயம் இம்முறை மேலும் ஒருபடி முன்னேறி 4ஆம் இடத்தை எட்டியிருப்பது அதன் தொடர்ச்சியான தர உயர்வையும் முறையான கல்வி நிர்வாகத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இந்த வியக்கத்தக்க வெற்றிக்கு அடித்தளமிட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. இரா. உதயக்குமார் மற்றும் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ. நசீர் ஆகியோரின் வழிகாட்டல்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. இவர்களுடன் இணைந்து அயராது உழைத்த ஏனைய பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், அர்ப்பணிப்புடன் கற்பித்த ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலதரப்பட்டோரின் கூட்டு உழைப்பே இந்த பிரம்மாண்ட சாதனைக்குக் காரணமாகும்.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளின் மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டலும் உத்வேகமும் அளிக்கப்பட்டால் அவர்களாலும் தேசிய மட்டத்தில் முதன்மை நிலைகளை அடைய முடியும் என்பதை திருக்கோவில் கல்வி வலயம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனை எதிர்காலத்தில் வலயத்தின் கல்வித் தரத்தை இன்னும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வதற்கான மிக வலுவான அடித்தளமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கும், அதற்குத் துணையாக நின்ற ஒட்டுமொத்தக் கல்விச் சமூகத்திற்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.