Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உதுமாலெப்பை எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் பாலமுனை ஹுஸைனியா நகருக்கு வாழ்வாதார உதவிகள்

Posted on June 28, 2026 by Admin | 129 Views

(பாலமுனை செய்தியாளர்- ஜுமான்)

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பாலமுனைப் பகுதியில் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹுசைனிய்யா நகர் (பாலமுனை -04) மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 16 குடும்பங்களுக்கு இந்நாட்டுக் கோழிகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

கிராமப்புறக் குடும்பங்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத் தரத்தை உயர்த்துவதை முதன்மை இலக்காகக் கொண்டே நான்கு இலட்சம் ரூபாய் (400,000) நிதியொதுக்கீட்டில் இந்த மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.ஏ. அன்சார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் நேரடிக் கண்காணிப்பிலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் முறையான வழிகாட்டலின் கீழும் இத்திட்டம் மிகவும் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இத்திட்டமானது அப்பகுதிப் பெண்களின் சுயதொழில் ஆர்வத்தை அதிகரிப்பதோடு, அவர்களின் குடும்பப் பொருளாதார நிலைத்தன்மைக்கும் வலு சேர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், கணக்காளர் எம்.எப். பர்ஹான், கால்நடை வைத்திய அதிகாரி ஏ. தையுபா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல். அலியார், மத்திய குழுச் செயலாளர் ஆசிரியர் ஏ.ஆர். ரினோஸ் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் ஏ.எல். இஷ்ஹாக் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகளும், பயனாளிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.