Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற 76ஆவது YMMA தேசிய மாநாடு

Posted on June 28, 2026 by Admin | 196 Views

(பாலமுனை செய்தியாளர்-ஹபீப்)

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ (YMMA) பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 76ஆவது வருடாந்த தேசிய மாநாடு இன்று (28) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாமரைக் கோபுர (Lotus Tower) கேட்போர் கூடத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இலங்கை முஸ்லிம் இளைஞர் சமூகத்தின் மத்தியில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட இப்பேரவையின் 2026/2027ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழுவைத் தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை தெமட்டகொடவிலுள்ள பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாகவும், உத்தியோகபூர்வ அறிவிப்பாகவும் இன்றைய மாநாடு அரங்கேறியது.

நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் புதிய தேசிய தலைவராக எம்.ஆர்.எம். சியாத் அவர்களும், பேரவையின் செயலாளராக இஹ்திசாம் எம். ஹுஸைன்டீன் அவர்களும் இரண்டாவது தடவையாக தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பேரவையின் கிளைப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் இன்று நடைபெற்ற 76ஆவது தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் கலந்துகொண்டார்.

1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வை.எம்.எம்.ஏ பேரவை இன்று இலங்கையின் நவீனத்துவத்தின் அடையாளமாக விளங்கும் தாமரைக் கோபுர கேட்போர் கூடத்தில் தனது 76ஆவது மாநாட்டை நடத்தியிருப்பது அது கால மாற்றத்திற்கு ஏற்ப நகரும் தன்மையைக் காட்டுவதாக அமைந்திருந்தது.

இம்மாநாட்டில் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் உட்பட வெளிநாட்டுத் தூதுவராலய அதிகாரிகள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.