(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை மண்ணின் விளையாட்டு உணர்வை மீண்டும் ஒருமுறை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்ற “அட்டாளைச்சேனை பிரீமியர் லீக்” (APL) மின்னொளி கிரிக்கெட் திருவிழாவின் 3வது பருவம் பிரதேச ரசிகர்களின் கரகோஷத்திற்கும் பேராதரவிற்கும் மத்தியில் கடந்த 29ம் திகதி மிக கோலாகலமாக நிறைவுற்றது.
தலா 11 வீரர்களைக் கொண்ட 7 முன்னணி அணிகள் களமிறங்கிய இந்தத் தொடர் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த மைதானத்தில் 8 ஓவர்கள் கொண்ட அதிரடி ஆட்டங்களாக அரங்கேறியது. தொடர் முழுவதும் நேர்த்தியான ஆட்டத்திறனையும், விட்டுக்கொடுக்காத விளையாட்டுப் பண்புகளையும் வெளிப்படுத்திய அணிகளுக்கு மத்தியில் இறுதிப் போட்டி என்ற மகுடத்திற்கான போரில் ‘கப்பலடி கிங்ஸ்’ மற்றும் ‘GTC சேலஞ்சர்ஸ்’ ஆகிய இரு பெரும் பலப்படை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ரசிகர்களின் நெஞ்சத் துடிப்பை அதிகரிக்கச் செய்த அந்த இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பைப் பெற்ற கப்பலடி கிங்ஸ் அணியினர் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 52 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை மாத்திரமே அவர்களால் நிர்ணயிக்க முடிந்தது.
53 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த GTC சேலஞ்சர்ஸ் அணியினர் ஆரம்பம் முதலே மிகுந்த நிதானத்துடனும் அதேநேரம் சாதுரியமான வியூகங்களுடனும் விளையாடினர். நேர்த்தியான துடுப்பாட்டத்தின் மூலம் மைதானத்தை அதிரவைத்த அந்த அணியினர் வெறும் 5 ஓவர்கள் நிறைவிலேயே 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 53 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக் கனியை மிக எளிதாகத் தன்வசப்படுத்தினர்.
இந்தத் தீர்க்கமான வெற்றியின் மூலம் அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் வரலாற்றில் தொடர்ந்து 3வது முறையாகவும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டு GTC சேலஞ்சர்ஸ் அணி புதியதொரு மைல்கல் சாதனையை முத்திரையாகப் பதித்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைப் பெருமிதத்திற்கு மேலும் ஒளி சேர்க்கும் வகையில் GTC சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் எம்.எம்.ரிழா அவர்கள் தனது அணியின் திறமையை கௌரவிக்கும் விதமாக அணியின் 15 வீரர்களுக்கும் தலா 10,000 ரூபா வீதம் மொத்தமாக 1,50,000 ரூபாவைப் பணப்பரிசாக வழங்கி நெகிழ்ச்சியூட்டினார்.
விளையாட்டையும் வீரர்களையும் கொண்டாடும் அவரது இந்தச் செயல், ஏனைய அணி உரிமையாளர்களுக்கும் விளையாட்டுப் பிரியர்களுக்கும் மத்தியில் ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும், உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பொன்னான தருணமாகவும் மாறியுள்ளது.
இம் மின்னொளி கிரிக்கெட் தொடரின் சிறந்த பத்து வீச்சாளராக மிப்ரா, சிறந்த துடுப்பாட்ட வீரராக சஜாத், தொடரின் சிறந்த வீரராக றப்சான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.







