Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக புதிய நிர்வாக உத்தியோகத்தராக ஏ.எம்.றிம்ஸான் கடமையேற்பு

Posted on July 3, 2026 by Admin | 221 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான ஏ.எம்.றிம்ஸான் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் உயர்தரப் பதவியான ‘அதிசிறப்பு’ (Supra Grade) தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய நிர்வாக உத்தியோகத்தராக இன்று (03) வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடந்த 1999ஆம் ஆண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக அரச சேவையில் இணைந்த அவர் கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் திறம்பட பணியாற்றி பரந்தளவிலான நிர்வாக அனுபவத்தைக் கொண்ட ஒருவராவார்.

அண்மைக் காலம் வரை ஆலையடிவேம்பு பிரதேச சபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக தனது சிறந்த சேவையை வழங்கி வந்த நிலையிலேயே தற்போது மீண்டும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் உயரிய நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்பு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தமையினால் இந்நியமனம் கிழக்கு மாகாண ஆளுநரினால் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அவர் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் சேவை மூப்பு அடிப்படையிலான பதில் நிர்வாக உத்தியோகத்தராக நீண்டகாலம் பணியாற்றி அங்குள்ள கல்வி நிர்வாகக் கட்டமைப்பு குறித்து சிறந்த நற்பெயரையும் அனுபவத்தையும் பெற்றிருந்தார்.

அவரது நீண்டகால சேவை அனுபவமும், நிர்வாகத் திறனும் வலயக் கல்வி அலுவலகத்தின் எதிர்காலப் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்ல பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.