Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

பொத்துவில் மத்திய கல்லூரியின் பொற்கால சிற்பி அதிபர் நபீஸ் இடமாற்றம்

Posted on July 3, 2026 by Admin | 417 Views

(பொத்துவில் செய்தியாளர்- அஹ்ஸன்)

பொத்துவில் மத்திய கல்லூரியின் வரலாற்றில் கடந்த இரண்டு ஆண்டுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வசந்த காலமாகும். அத்தகு பெருமைக்குரிய மாற்றங்களை நிகழ்த்தி பாடசாலையின் புகழை இந்த நாடே திரும்பிப் பார்க்கச் செய்த பெருமதிப்பிற்குரிய அதிபர் எம்.எஸ்.நபீஸ் முஹம்மட் (SLEAS) அவர்கள் நேற்று (02) தனது கடமைகளை நிறைவு செய்து கொண்டு விடைபெற்றுள்ளார்.

அவர் தனது பழைய சேவை நிலையமான திருக்கோவில் கல்விப் பணிமனைக்கு நிர்வாகத்திற்கு பொறுப்பான கல்விப்பணிப்பாளராக கடமையை தொடரவுள்ளார். அவர் விடைபெறும் வேளையில் பாடசாலையின் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய அமீனுல்லஹ் அவர்களிடம் தனது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைத்துள்ளார்.

பல்துறை ஆளுமைகளை உருவாக்கிய பெருமைமிக்க பொத்துவில் மத்திய கல்லூரிக்கு அதிபர் நபீஸ் அவர்களின் வருகை ஒரு புதிய உத்வேகத்தைத் தந்திருந்தது. இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) அதிகாரியான அவரின் மதிநுட்பமான நிர்வாகத் திறமையின் காரணமாக மிகக் குறுகிய காலத்திற்குள் பாடசாலையின் கல்வி மற்றும் ஒழுக்க விழுமியங்கள் அசுர வளர்ச்சி கண்டன.

இதன் நேரடி விளைவாக கடந்த ஒரே வருடத்திற்குள் பாடசாலையின் நன்மதிப்பு பன்மடங்கு உயர்ந்து, பாடசாலையில் இணைய விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாதவாறு பெருமளவில் அதிகரித்தது. இது ஒன்றே அவரின் ஆளுமைக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாக அமைந்திருக்கிறது.

பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள், கல்விசார் அடைவுகள் என ஒவ்வொன்றையும் ஒரு சிற்பியைப் போல மிக அழகாகச் செதுக்கி அதன் புகழை ஓங்கச்செய்த பெருமை நபீஸ் சேர் அவர்களையே சாரும். மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்வதற்காக இரவுபகல் பாராது உழைத்த இந்த மாபெரும் வழிகாட்டியின் சேவையை பாடசாலைச் சமூகமும், பொத்துவில் மண்ணும் என்றும் நன்றியோடு நினைவுகூரும்.

அர்ப்பணிப்புடன் பணியாற்றி விடைபெறும் அன்பிற்குரிய அதிபர் நபீஸ் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நோயற்ற வாழ்வையும், நீண்ட ஆயுளையும் இன்னும் பல உயர்பதவிகளையும் வழங்கி ஈருலகிலும் கௌரவப்படுத்த வேண்டும் என பாடசாலை சமூகமும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் நெஞ்சார வாழ்த்தி விடையனுப்பியுள்ளனர்.