Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

5 வருடங்களுக்கு இடமாற்றம் கிடையாது- கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி உத்தரவு

Posted on July 3, 2026 by Admin | 366 Views

“அம்மாவுக்கு சுகமில்லை, மனைவிக்கு சுகமில்லை என்று காரணங்களைக் கூறி புதிய நியமனம் பெற்ற அரச அதிகாரிகள் யாரும் ஐந்து வருடங்களுக்குள் இடமாற்றம் கோர முடியாது. நியமனம் பெற்ற இடத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும்” என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலையில் உள்ள மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் 61 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் 7 படவரைகலை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதுடன், வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சையில் சித்தியடைந்த 33 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு (விசேட தரம்) பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஊழல், விரயம் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்தி, நிதி ஒழுக்கத்தைப் பேணி வருவதன் காரணமாக இலங்கை பொருளாதார ரீதியாக வெற்றியை நோக்கி பயணிப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

அரச சேவையில் நிலவும் இடமாற்றக் கோரிக்கைகள் குறித்து ஆளுநர் விமர்சிக்கையில், கடந்த காலத்தில் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்றொரு திட்டம் இருந்தது போல, தற்போது நியமனம் பெறுபவர்கள் ‘அருகிலுள்ள அலுவலகமே சிறந்த அலுவலகம்’ என்று நினைப்பதாகக் குறிப்பிட்டார். அவ்வாறான செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தில் இடமில்லை என்று தெரிவித்ததுடன் இவை மாவட்ட ரீதியிலான நியமனங்கள் அல்ல ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திற்குமான நியமனங்கள் என்பதால் சுயநலக் காரணங்களுக்காக அரச சேவையின் சமநிலையை சீர்குலைக்க அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க, பிரதிப் பிரதம செயலாளர் என். மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.