Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 143 களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு ஆரம்பம்

Posted on July 10, 2026 by Admin | 181 Views

எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய நாட்களில் அதிகளவில் நெல் அறுவடை செய்யப்படும் வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி நெல் களஞ்சியசாலைகளைத் திறந்து இந்த கொள்முதல் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை ஒரு கிலோ நாடு நெல்லை 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யவுள்ளதுடன் இதற்காக 143 இடங்களில் உள்ள களஞ்சியசாலைகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார். தேவைப்படின் மேலதிகமாகத் தனியார் துறை களஞ்சியசாலைகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தினால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6,000 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், அடமானக் கடன் திட்டத்தின் கீழ் மேலதிகமாக 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் தகுதியுடைய கூட்டுறவுச் சங்கங்களுக்கு நெல் இருப்புகளைச் சேகரிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் விவசாய நல்வாழ்வு மேம்பாட்டுத் திணைக்களம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பாதுகாப்பு இருப்புக்காகவே இந்த நெல் கொள்வனவு செய்யப்படுவதாகவும் ஈரப்பதம் 14 சதவீதமாகவும், உமி அல்லது பதர் சதவீதம் 9 சதவீதத்தை விடக் குறைவாகவும் உள்ள தரப்படுத்தப்பட்ட நெல்லை மட்டுமே கொள்வனவு செய்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்