Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

கிழக்கின் அரசியல் ஆளுமை மர்ஹூம் எம். அப்துல் மஜீத் அவர்களுக்கான கத்தமுல் குர்ஆன் நிகழ்வு

Posted on July 11, 2026 by Admin | 66 Views

(பொத்துவில் செய்தியாளர் – முஸால்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான (SSP) மர்ஹூம் எம். அப்துல் மஜீத் அவர்களின் ஞாபகார்த்தமான கத்தமுல் குர்ஆன் ஓதல் மற்றும் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று (11) சனிக்கிழமை பொத்துவில் பெரிய பள்ளிவாசலில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பொலிஸ் சேவையில் நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்த மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்கள் பின்னர் அரசியலில் பிரவேசித்து கிழக்கு மாகாணத்தின் சமூக, கல்வி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றியிருந்தார். குறிப்பாக இன முரண்பாடுகளின் போதும், கடினமான காலங்களிலும் அவர் சமூகங்களுக்கிடையில் கட்டிக்காத்த நல்லுறவும், அவரது துணிச்சலான சமூக சேவைகளும் நினைவு கூரப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் முஷர்ரப் முதுநபீன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச உலமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் , பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மர்ஹூமின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்தித்தனர்.

நிகழ்வின் இறுதிப் பகுதியில் மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகளைப் போற்றும் வகையில் நினைவுப் பேருரைகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து, அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காக விசேட கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு, விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.