Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் இல்முதீன் இபாஸ் முஹம்மட்டிற்கு கல்வி முகாமைத்துவ முதுமாணிப் பட்டம்

Posted on July 13, 2026 by Admin | 197 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-ஹாஜித்)

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் இல்முதீன் இபாஸ் முஹம்மட் கல்வி முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தை (Master of Education in Educational Management) சிறப்புச் சித்தியுடன் பெற்று அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கும் ஒட்டுமொத்த கல்விச் சமூகத்திற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முகாமைத்துவ முதுமாணிப் பட்டப் பின்கற்கை நெறியினை (SLQF Level 10) தொடர்வதற்காக, உலக வங்கியின் ‘GEMP’ செயற்திட்டத்தின் விசேட புலமைப்பரிசிலுக்கு இவர் தெரிவாகியிருந்தார்.

உலகத் தரம் வாய்ந்த இந்தச் செயற்திட்டத்தின் கீழ் தனது ஆய்வினையும் கல்வியையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வெற்றிகரமாக முன்னெடுத்ததுடன் 12 ‘A’ சித்திகளையும் ஒரு ‘B’ சித்தியையும் பெற்றுச் சிறப்புச் சித்தியுடன் இப்பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளமை சிறப்பம்சமாகும்.

ஆய்வுடன் கூடிய இந்தக் கல்வி முகாமைத்துவ முதுமாணிப் பட்டத்தை அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பெற்ற முதல் நபர் என்ற வரலாற்றுப் பெருமையையும் இவர் தனதாக்கிக் கொண்டுள்ளமை இப்பிரதேச மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையைச் (SLTES) சேர்ந்த இவர் கல்வித்துறையில் நீண்டகால மற்றும் காத்திரமான அனுபவங்களைக் கொண்டவராவார். முன்னதாக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட ஆசிரியர் வள நிலையங்களிலும் விரிவுரையாளராகக் கடமையாற்றி, அப்பிரதேசங்களின் கல்வி மேம்பாட்டிற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.

தற்போது அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் தொழில்முறை (Professional) விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவரது அர்ப்பணிப்புமிக்க கல்வி வழிநடத்தலானது அங்கு பயிலும் ஆசிரியர் பயிற்சிப் பயிலுனர்களின் கல்வி அடைவு மட்டத்திலும் பரீட்சைப் பெறுபேறுகளிலும் பாரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த ஆளுமையுள்ள ஆசிரியர்களை எதிர்கால சமூகத்திற்காக உருவாக்கும் இவரது வழிகாட்டல்கள் கல்வித்துறை சார்ந்த பலராலும் விதந்துரைக்கப்பட்டு வருகிறது.

கல்வித்துறையின் வளர்ச்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டு வரும் சிரேஷ்ட விரிவுரையாளர் இபாஸ் முஹம்மட் அவர்களின் இந்த உயரிய சாதனை பலருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். இவர் எதிர்காலத்தில் இன்னும் பல உயரிய கல்விச் சாதனைகளைப் படைத்து, சமூகத்திற்கும் நாட்டிற்கும் மேலும் பல அளப்பரிய சேவைகளை வழங்க வேண்டும் எனப் பிரதேச மக்களும், கல்விமான்களும், சமூக ஆர்வலர்களும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.