Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை காணிப் பிரச்சினைக்கு துரித தீர்வு

Posted on July 13, 2026 by Admin | 81 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

பீங்கான் கூட்டுத்தாபனத்தின் இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலைக்காக சுவீகரிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளை அளவீடு செய்து நீண்டகாலமாக நிலவும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, தமது அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த 8ஆம் திகதி அமைச்சர் லால் காந்த தலைமையில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இந்த விடயம் தொடர்பில் விசேட பிரேரணையொன்றை முன்வைத்திருந்தார்.

அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பீங்கான் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஓட்டுத் தொழிற்சாலைக்காக 1970ஆம் ஆண்டு காணிகள் சுவீகரிக்கப்பட்டன. பின்னர் 1978.12.28 ஆம் திகதியிடப்பட்ட 16/9 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக 25 பேருக்குச் சொந்தமான 197 ஏக்கர் 3 ரூட் உறுதிக் காணிகள் பீங்கான் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாரபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. தமது இக்காணிகளை மீட்டுத் தருமாறு கோரி, பாதிக்கப்பட்ட தனியார் காணி உரிமையாளர்கள் பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றமையை உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.

இக்காணிகளை விடுவிப்பது தொடர்பாக காணி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, அம்பாறை மாவட்டச் செயலகம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகம் ஆகிய மட்டங்களில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படவில்லை.

கடந்த 2025.07.16 ஆம் திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளை நில அளவை செய்து எல்லைகளை நிர்ணயிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக நில அளவைத் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய 16 இலட்சம் ரூபா கட்டணத்தைக் கைத்தொழில் அமைச்சு செலுத்த இணங்கிய போதிலும், அத்தொகை இதுவரை செலுத்தப்படாமையினால் காணி அளவீட்டுப் பணிகள் முடங்கி, மக்களின் பிரச்சினை தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். எனவே, காணி இழந்த மக்களின் விடயத்தில் விசேட ஏற்பாடுகளைச் செய்தாவது தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் காணி ஆணையாளரிடம் அமைச்சர் லால் காந்த விளக்கம்கோரிய போது, குறித்த நிதியைச் செலுத்துவதற்குக் கைத்தொழில் அமைச்சு இணங்கியிருந்தும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த அதிகாரபூர்வ சிக்கல்களைத் தாண்டி காணி இழந்த மக்களின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாண்பதற்கான மாற்று ஆலோசனைகளை வழங்குமாறு அமைச்சர் லால் காந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்போது பதிலளித்த அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை காணி விவகாரத்தில் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு துரித கதியில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலான இந்த சாதகமான தீர்மானத்துக்காக அமைச்சர் லால் காந்த மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்குப் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கூட்டத்தின் இறுதியில் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.