Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

அம்பாறை மாவட்ட சுற்றுலாத்துறையில் புதிய மறுமலர்ச்சி

Posted on August 4, 2026 by Admin | 298 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அம்பாறை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கிலான சுற்றுலாத்துறை பங்குதாரர்களுடனான விசேட கலந்தாலோசனைக் கூட்டமொன்று அண்மையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ருவன் ரணசிங்க ஆகியோரின் நேரடிப் பங்கேற்பில் இந்த முக்கிய கூட்டம் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கான முன்னுரிமைச் செயற்பாடுகளை இனங்கண்டு விவாதித்தல், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை சார்ந்த செயற்திட்டங்கள் மற்றும் முயற்சிகளை மீளாய்வு செய்தல், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் தடைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை ஆராய்தல், இத்துறை சார்ந்த தொடர்புடைய பங்குதாரர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல் விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

சுற்றுலாத்துறையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்ட இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் எம்.எஸ். வாஸித் , ஆதம்பாவா அபூபக்கர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் முஷரப், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.