Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

அட்டாளைச்சேனையில் மின்மாற்றிகளைக் குறிவைக்கும் கேபிள் திருடர்கள்

Posted on August 5, 2026 by Admin | 202 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஹபீப்)

அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மின்மாற்றிகளை (Transformers) இலக்கு வைத்து பெறுமதிமிக்க செப்பு வயர்களை (Copper cables) வெட்டித் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதான வீதி மற்றும் பிரதேச சபைக்குச் செல்லும் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய மின்மாற்றிகளில் நள்ளிரவு வேளைகளில் புகுந்த இனந்தெரியாத திருடர்கள், அங்கிருந்த கேபிள்களை மிகத் துணிகரமாக வெட்டித் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தத் திடீர் திருட்டுச் சம்பவங்களால் அப்பகுதிகளில் பல மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டது. நள்ளிரவு வேளையில் ஏற்பட்ட இருள் மற்றும் புழுக்கம் காரணமாக முதியவர்கள், நோயாளிகள் மற்றும் கைக்குழந்தைகள் எனப் பலரும் தூக்கத்தை இழந்து கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் அப்பகுதியின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மின்தடை குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாகச் செயற்பட்ட இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்கள், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். திருடர்களால் சேதமாக்கப்பட்ட பகுதிகளைத் துரித கதியில் சீரமைத்து, மின் விநியோகத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தனர். மின்சார சபை ஊழியர்களின் இந்த உடனடி நடவடிக்கை பொதுமக்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது.

பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலான இந்தச் சதிச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகப் பாதுகாப்புப் பிரிவினர் தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே நள்ளிரவு வேளைகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.