Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு: இதுவரை 88,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு

Posted on August 8, 2026 by Admin | 78 Views

நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மீளவும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரை 88,522 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், இந்நோய்த் தாக்கத்தினால் இதுவரை 63 பேர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதுடன், டெங்கு மரண வீதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சமீபத்திய மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இம்மாதத்தின் (ஒகஸ்ட்) முதல் ஆறு நாட்களுக்குள் மாத்திரம் 3,175 புதிய நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதுடன் ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும் , ஜூன் மாதத்தல் 21,533 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாட்டிலேயே மேல் மாகாணமே டெங்குவின் பிடியில் அதிகளவில் சிக்கியுள்ளது. மொத்த நோயாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 52.96 சதவீதமானோர் (46,885 பேர்) மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். மேல் மாகாணத்தைத் தொடர்ந்து, தென் மாகாணமே அதிகளவிலான டெங்கு பாதிப்பைச் சந்தித்துள்ள இரண்டாவது மாகாணமாகப் பதிவாகியுள்ளது.

மாவட்ட ரீதியிலான தரவுகளின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்ச நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். பிரதான மாவட்டங்களின் பாதிப்புகளாக கம்பஹா மாவட்டத்தில் 18,832 , கொழும்பு மாவட்டத்தில் 17,568 , கண்டி மாவட்டத்தில் 6,228 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்

டெங்கு பரவல் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள 119 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிக அபாயமிக்க வலயங்களாக (High-Risk Zones) அடையாளங் காணப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையிலான சூழலைத் தவிர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். பொதுமக்கள் தங்களது வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுத்தமாகப் பேணுவதுடன், நீர் தேங்கும் இடங்களை உடனடியாக அழித்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது உயிர்ச்சேதங்களைத் தவிர்க்க உதவும்.