நிர்வாக முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பலமான ஆயுதமாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) திகழ்கிறது. இதற்கு வடக்கில் அண்மையில் அம்பலமான 19 வருடங்களுக்கு முந்தைய நிர்வாக முறைகேடு ஒரு சிறந்த உதாரணமாகும். இந்தச் சம்பவமானது தகவல் கோரி 147 நாட்கள் கடந்தும் அதனை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்து வரும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு ஒரு சிறந்த பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு வடக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் (தரம் III) பதவிக்கான நியமனத்தில் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 புள்ளிகள் பெற்றவர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட வேண்டும் என சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும் மன்னார் மாவட்டத்தில் 38 புள்ளிகளைப் பெற்ற இருவருக்கு மாத்திரம் விசேடமாக நியமனம் வழங்கப்பட்டு அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 19 வருடங்களின் பின்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகவே இந்த முறைகேடு தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதுடன் இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் வரை ஆதாரங்களுடன் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. “உண்மையை எவ்வளவு காலம் மூடி மறைத்தாலும் என்றாவது ஒருநாள் அது வெளிவந்தே தீரும்” என்பதை இச்சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது.
இந்த யதார்த்தத்தை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் இன்னும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அவர்களின் தற்போதைய செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறித்த வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் செயற்பாடுகள் தொடர்பில் RTI ஊடாகத் தகவல் கோரப்பட்டு 147 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை எவ்வித தகவல்களையும் வழங்காமல் அதிகாரிகள் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர்.
தகவல்களை வழங்காமல் தட்டிக்கழிப்பதன் மூலம் தங்களது பொறுப்பற்ற செயற்பாடுகளையும் முறைகேடுகளையும் நிரந்தரமாக மூடிமறைத்து விடலாம் என அதிகாரிகள் தப்புக் கணக்குப் போடக் கூடாது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த இருட்டடிப்புச் சம்பவங்களே இன்று ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வரும்போது தற்போதைய முறைகேடுகள் அம்பலமாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
சட்டத்தின் பிடியில் இருந்து எவரும் தப்பிவிட முடியாது. பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு அரச அதிகாரிகளுக்கு உண்டு. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளின் பொறுப்பற்ற இச்செயற்பாடுகள் தொடர்பில் 17 அரச உயர் திணைக்கள அதிகாரிகள், ஆணையாளர்கள் ஆகியோரிடம் முறைப்பாடு செய்து RTI ஊடாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திடம் கோரப்பட்ட தகவல்களை வெளிக்கொணர்வதற்கான அனைத்துப் பூர்வாங்க ஏற்பாடுகளும் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதிகாரிகள் வீணாகக் காலம் தாழ்த்தாமல் அவற்றை உடனடியாக வழங்க முன்வர வேண்டும்.
வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய கல்வித் துறையில் இவ்வாறான இழுத்தடிப்புகள் அதிகாரிகள் மீதான சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்கின்றன. உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. அவை ‘RTI’ என்ற ஆயுதம் மூலம் மீண்டும் விழித்தெழும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயற்படுவது அவசியமாகும்.