குருவிட்ட, தெவிபஹல, தோடன் பகுதிகளைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரை பயங்கரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பில், 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, பாலியல் வன்புணர்வுக்கு முயன்ற போது, குறித்த பெண் சத்தம் போட முயன்றதையே காரணமாகக் கூறி, சந்தேக நபர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்திற்குப் பின்னர், பெண்ணின் தங்கச் சங்கிலி, கைப்பை மற்றும் கைப்பேசி ஆகியவை தொலைதூர பகுதியில் வீசப்பட்டு கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
கொலை நடந்ததற்குப் பிறகு மறைவில் இருந்த சந்தேகநபர், பொலிஸ் K9 பிரிவின் உதவியுடன் கடந்த ஜூலை 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவர் எந்தவொரு பாடசாலையிலும் கல்வி பெறாதவர் என்பதும் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, சந்தேக நபர் தற்போது தெஹியோவிட்ட சிறுவர் தடுப்பு மையத்தில் வைத்துள்ளதுடன், 18 வயதானதும் சிறையிலடைக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான கொலைச் சம்பவம் ஜூலை 2 ஆம் திகதி மதியம், வேலை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பெண், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கு கடந்த ஜூலை 4 ஆம் திகதி மதியம், குருவிட்ட மயானத்தில் நடைபெற்றது.