அம்பாறை மாவட்டம் பக்கிஎல்ல பகுதியில் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு கொலைவழக்குகளில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் வெளியிட்ட தகவலின்படி, சீதுவை, ராகமை, ஹோமாகம, கல்கிஸ்ஸ உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்களுடன் இந்நபருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் இராணுவ சிப்பாய் என்பதும், அவர் 8க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறான். இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மேலும், அவரிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், நான்கு போலி அடையாள அட்டைகள் மற்றும் ஒரு தொகை ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேகநபர் பல்வேறு பெயர்களில் தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியிருப்பதும் விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
இந்த கைது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த மர்மமான கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் முகங்களை வெளிக்கொணரும் முக்கிய முன்னேற்றமாக காவல்துறை கருதுகிறது.