வங்கியில் போதுமான நிதியில்லாமல் அல்லது மூடிய கணக்கிலிருந்து காசோலையை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டத் திருத்தம் விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
இந்தத் திருத்தத்தின் கீழ், குற்றமாகக் கருதப்படும் நடவடிக்கைகள் காரணமாக அபராதம் செலுத்த வேண்டியதுடன், அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என நீதி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 6 மாதங்களுக்குள் செலுத்த வேண்டிய காசோலையை பெற்ற நபர், எழுத்துப்பூர்வமாக பணம் கேட்டு 90 நாட்களுக்குள் பணம் பெற முடியாவிட்டால், காசோலையை வழங்கியவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். இத்தகைய குற்றங்களுக்கு, காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு சமமான அபராதமும் விதிக்கப்படும்.
இந்த மாற்றங்கள், பரிமாற்ற அவசரச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. வங்கிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதும், நிதி ஒழுங்கை மேம்படுத்துவதும் இத்திருத்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
நாடளாவிய ரீதியில் வங்கி மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.