Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

சுகாதாரத் துறையில் வேலை செய்யும் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார ஆடைகளைத் தடைசெய்யும் உத்தரவு ஏற்க முடியாது – இம்ரான் மகரூப் எம்.பி.

Posted on July 31, 2025 by Admin | 164 Views

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகாதார துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் கலாசார அடையாளமாக அணியும் ஆடைகளைத் தடைசெய்யும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குத் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“திருகோணமலையில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பணியாற்றும் முஸ்லிம் தாதியர்கள், மருத்துவ மாதுகள் மற்றும் சிற்றூழியர்கள் பல வருடங்களாக தமது சீருடைக்கு கூடுதலாக கலாசார உடைகளையும் அணிந்து வருகின்றனர். தற்போது, அவர்கள் இனிமேல் அந்த ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.”

“இது மிகவும் கவலைக்கிடமானது. இனவாத போக்கை வெளிக்காட்டும் இந்தத் தடைச் செயல், எந்தவொரு ஆட்சியில் கூட இல்லாத அளவுக்கு பிரச்சனையை உருவாக்குகிறது. இனவாதத்தை ஒழிக்கப் போகும் அரசாங்கமே இப்போது அதனை ஊக்குவிக்கின்றது என்பதுபோல எண்ணப்படுகின்றது. இது ஒரு சமூகத்தையும் கலாசார சுதந்திரத்தையும் மதிக்காத செயற்பாடாகும்.”

“இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். சுதந்திரமாகவும், தங்களது கலாசார அடையாளங்களைப் பேணிக்காக்கும் உரிமையுடன் தங்கள் கடமைகளை மேற்கொள்வதற்கு உரிமை வழங்கப்பட வேண்டும். இந்நிலையில், இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தி தீர்வு வழங்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.