Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை

Posted on May 22, 2025 by Arfeen | 103 Views

இலங்கையில் புதிய COVID-19 வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இது தொடர்பான பரிசோதனை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த புதிய திரிபு பரவலுக்கான அபாயம் அதிகமில்லை எனவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆசியாவின் பல பகுதிகளில் சமீபகாலமாக COVID-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தேசிய ரீதியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், ஒருங்கிணைந்த சுவாச நோய்கள் கண்காணிப்பு திட்டம் நாட்டின் முக்கிய மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போதைய கண்காணிப்பு தரவுகளின்படி, இலங்கையில் COVID-19 பாதிப்புகளில் வேகமான அதிகரிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், நுண்ணுயிரியல் ஆய்வகங்கள் மற்றும் கண்காணிப்பு மையங்கள் அவ்வப்போது பரிசோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

மற்ற சுவாச நோய்கள் போலவே COVID-19 இலும் காலச்சுழற்சி அடிப்படையில் தொற்றுகள் மிதமான அளவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களுக்கு பெரிதாக ஆபத்து இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக இருந்து சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

முக்கியமாக, அடிப்படை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். அடிக்கடி கை கழுவுதல், இருமல் அல்லது தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் போன்ற நடைமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு நேரத்துக்கும் துல்லியமாகவும் தகவல்களை வழங்க சுகாதார அமைச்சகம் தயாராக உள்ளதோடு, வைத்தியசாலைகள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில், கோவிட்-19 தொடர்பான உண்மையான தகவல்களை சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலமாகவே பெறுமாறு பொதுமக்களை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.