Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

தான் கொடுத்த வாக்குறுதிகளை இவ்வரசு மறந்து செயற்படுகிறது – உதுமாலெப்பை குற்றச்சாட்டு

Posted on May 25, 2025 by Admin | 190 Views

(அபூ உமர்)

இனவாத கருத்துக்களை பரப்புவர் எவராக இருந்தாலும், சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சிக்கு வருவதற்கு முன் தான் கொடுத்த வாக்குறுதிகளை இவ்வரசு மறந்து செயற்படுவதாகவும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் கூறினார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ், குற்றவியல் நடைமுறைச் சட்ட திருத்தம் தொடர்பான குழு விவாதத்தில் (23.05.2025) உரையாற்றிய அவர், “ஐக்கிய சமூகங்களுக்கிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இனவாதிகளை சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், நீதியும் தேசிய ஒருமைப்பாடும் உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டிய மையக் கூறுகளாகும் எனவும், இந்த அமைச்சுக்கு மக்களுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் இருப்பதாகவும் கூறினார்.

பயங்கரவாதத் தடைக் சட்டம் தொடர்பாக, தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முரணான செயற்பாடுகள் இன்று நடைமுறையில் உள்ளதாகவும், இதனால் மக்களிடையே அரசின் மீது நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அந்தச் சட்டத்தை முற்றாக நீக்க நீதியமைச்சு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாகவும் எச்சரிக்கை எழுப்பிய அவர், “வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு இன்றுவரை உருவாக்கப்படவில்லை. அது தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

‘அழகான தீவு – புன்னகைக்கும் மக்கள்’ எனும் ஜனாதிபதி முயற்சிக்காக நியமிக்கப்பட்ட குழுவில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியது அவசியம் எனக் கூறிய அவர், இவை இல்லாமல் திட்டத்தின் நோக்கம் கைசேறாது என எச்சரித்தார்.

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பாக நீதியமைச்சிடம் விளக்கம் கேட்ட போதும், அது தங்களின் அமைச்சு சார்ந்ததல்ல என பதிலளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். “தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய அமைச்சே சமத்துவம் இல்லாத அணுகுமுறைகளை கண்டுகொள்ளாமை தகுந்தது அல்ல,” என்றார்.

உள்ளுராட்சி தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம் முன்வைத்த யோசனைகளையும் உதுமாலெப்பை மேற்கோளிட்டார். அந்தக் குறைபாடுகளை ஆராய குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற யோசனை அவதானிக்கப்படாமை, தற்போது ஆட்சியமைப்பில் ஏற்பட்டுள்ள தடுமாற்றங்களுக்கு காரணமெனவும் தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தல் முறையின் குறைபாடுகள், சீரான பிரதிநிதித்துவம் இல்லாமை, மற்றும் தேர்தல் வெற்றிக்காக பணவழங்கும் கலாசாரம் ஆகியவை ஜனநாயகத்திற்கு சவாலை ஏற்படுத்துவதாகவும், அவை எதிர்கால அரசியல் நேர்மையை பாதிக்கக்கூடியவை எனவும் எச்சரித்தார்.