இன்று(28.08.2025) பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிந்தவூர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இருந்து ஊடகங்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி சமூகத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஓரிரு தினங்களாக நடைபெற்ற அம்பாறை மாவட்டம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பேசப்பட்ட விஷயங்கள், குறிப்பாக பொத்துவில் கல்வி வலயப் பிரச்சினைகள் ஊடகங்கள் வழியாக மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டன. அந்தக் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டதன் பின்பு, இன்று நடைபெற்ற கூட்டத்தில் “Video எடுக்கக் கூடாது” என்ற காரணத்தால் ஊடகங்களை வெளியேற்றியிருப்பார்களா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
மக்களின் அபிவிருத்தி, அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களிலிருந்து ஊடகங்களைத் தடுக்க முயல்வது, ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளை சிதைக்கும் செயல் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
“மக்களின் குரலை அடக்க முடியாது” என்ற ஜனநாயகச் சிந்தனையை மீறி, ஊடகங்களை மௌனப்படுத்தும் இச்செயல், “மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மக்கள் பிரதிநிதிகள் தயங்குகிறார்கள்” என்ற சந்தேகத்தை தூண்டியுள்ளது.
ஊடகம் என்பது மக்களையும் ஆட்சியையும் இணைக்கும் பாலம். அந்தப் பாலத்தை முறியடிப்பது, உண்மையை மறைக்கத் திட்டமிடும் முகமூடியாகவே பார்க்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் மூலம், “ஊடக தர்மத்தை என்பிபி அரசு மீறுகிறது” என்ற குற்றச்சாட்டு பலத்தோடு ஒலிக்க இச்செயல் காரணமாக அமைந்துவிடக் கூடாது.
தகவலை வெளிக்கொணரும் ஊடகங்களை அடக்க முயல்வது, மக்கள் நலனுக்காக செயற்பட வேண்டிய ஆட்சியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
தன்னில் பிழை இல்லையென்றால், தான் மக்களுக்காக சேவகம் செய்பவர் என்றால், தனது பேச்சுக்கள் மக்கள் மத்தியில் செல்லும் போது யார்? ஏன்? எதற்கு? பயப்பட வேண்டும்?
இன்றைய நிந்தவூர் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் வீடியோ கேமராக்களைத் தடை செய்தது….
இலங்கை முழுவதற்குமான நடைமுறையா? அல்லது
அம்பாறை மாவட்டத்திற்கே மட்டுமா? என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
இது வெறும் ஊடகத் தடையா? அல்லது ஜனநாயகத்தையே அடக்கும் முன்னோட்டமா?
என்ற கேள்வியே இன்று மக்களின் மனதில் தீவிரமாக எழுகிறது