இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நாணயத் தாளை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார். புழக்கத்தில் செல்லக்கூடிய நினைவு நாணயத் தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட ஐந்தாவது நினைவு நாணயத் தாளாகவும் அமைகிறது.
“சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நாணயத் தாள், பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தி தேசிய அபிவிருத்திக்கான அடித்தளத்தை அமைப்பதில் மத்திய வங்கியின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார, மற்றும் நாணயத் திணைக்கள ஆளுநர் பீ.டீ.ஆர். தயானந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.