தங்காலை நகர சபை ஊழியர்களில் பலருக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கப்பட்டு சுற்றுலா சென்றது, எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், விடுமுறைக்கான அனுமதியை பேருந்து விபத்தில் உயிரிழந்த நகர சபை செயலாளர் பி.டபிள்யூ.கே. ரூபசேனவே வழங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதனை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.இ.என்.இ. அபயரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊழியர்கள் இடமாற்றம் தொடர்பாகவே சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இத்தனை ஊழியர்கள் விடுமுறை பெறுவது சிக்கலான சூழ்நிலையை உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டார். எல்ல–வெல்லவாய சாலை விபத்திற்குப் பிறகே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், பேருந்து விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு, ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாவுக்கு மேலுமாக, போக்குவரத்து அமைச்சு கூடுதலாக 1 இலட்சம் ரூபாய் வழங்கத் தீர்மானித்துள்ளது.
நகர சபையில் உள்ள 47 ஊழியர்களில் 22 பேர் சுற்றுலாவில் பங்கேற்றதாகவும், மற்றவர்கள் பங்கேற்கவில்லை என்றும் நகர சபை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நகர சபைத் தலைவர் பி.பி.ஜி. நந்தசிறி, அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் விடுமுறை வழங்கும் அதிகாரம் செயலாளரிடம் மட்டுமே இருந்ததாகவும், தற்போது காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நகர சபை மற்றும் தங்காலை வணிக சமூகத்துடன் ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.