கடுமையான அரசியல் அசாதாரண சூழ்நிலைக்குப் பிறகு நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் இன்று இரவு அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவிருக்கிறார்.
சமீபத்தில், அந்த நாட்டில் 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பாராளுமன்றம், அரச கட்டிடங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்கள் தீவைக்கப்பட்டன.
இதன் விளைவாக, பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியது. அதன் பின்னர், நாட்டின் சட்ட ஒழுங்கை காக்கும் பொறுப்பை நேபாள இராணுவம் ஏற்றுக்கொண்டது. இதனால், போராட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்பட்டு, நாடு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த நிலையில், அரசியல் மற்றும் நிர்வாக நிலைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் சுஷிலா கார்க்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.