Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

கிழக்கு மாகாண வீடமைப்பு திட்டங்களை ஆளும் கட்சியினருக்கு மட்டும் வழங்குவதை தவிர்க்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

Posted on September 22, 2025 by Admin | 82 Views

(அபூ உமர்)

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கு மாத்திரம் வழங்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22.09.2025) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமல்லெப்பை கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கிராமிய மின்சாரம் மற்றும் வீடமைப்பு அமைச்சராக நான் பதவி வகித்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்காக கிழக்கு மாகாணத்திற்கென தனியான வீடமைப்பு அதிகார சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கையை அக்காலகட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த அட்மிரல் மொஹான் விஜய விக்ரம அவர்களிடம் முன்வைத்து  இலங்கையில் அமைந்துள்ள 09 மாகாண சபைகளிலும் தனியான வீடமைப்பு அதிகார சபை உருவாக்கப்படாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வீடமைப்பு அதிகார சபையை 2014ம் ஆண்டு உருவாக்கினோம். 

2014ம் ஆண்டு திரைசேரியினால் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு 7 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. 2025ம் ஆண்டில் 132.69 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் வீடமைப்பு அதிகார சபையினால் கிழக்கு மாகாணத்தில் கனிசமான மக்களின் வீடமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு 2025ம் ஆண்டு வீடமைப்புத் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட 132.69 மில்லியன் நிதியினை ஆளும் கட்சியினரின் சிபாரிசுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் முறைப்பாடு செய்கின்றனர். இந்த செயற்பாடு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைக்கு ஆரோக்கியமானது அல்ல எனவும், கிழக்கு மாகாண சபையின் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் கட்சி பேதத்திற்கு அப்பால் செயற்படுத்தப்பட வேண்டும் அல்லது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முன்வைக்கும் திட்டங்களை வைத்து செயற்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கேட்டுக் கொண்டதுடன், விரைவில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை குறித்து பாராளுமன்றத்தில் பேசவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

நீண்டகாலமாக கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட பற்றாக்குறைக்கும், நிறைவு செய்யப்படாத பாடசாலைக் கட்டிடங்களையும் நிறைவு செய்யும் செயற்பாடுகளுக்கு 2026ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் கோரிக்கைக்கு பதிலளித்த கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அடுத்த வருடத்திலிருந்து (2026) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் செயற்பாடுகளில் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் கிழக்கு மாகாணத்திலுள்ள  பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட பற்றாக்குறை மற்றும் நிறைவு செய்யப்படாத கட்டிடங்கள் தொடர்பாகவும் முன்னுரிமை அடிப்படையில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் பதிலளித்தார்.