மொனராகலை – பொத்துவில் வீதி 19ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவமொன்றில் தூங்கிக்கொண்டிருந்த தனது கணவரை மனைவி கோடாரியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 வயதுடைய நான்கு குழந்தைகளின் தந்தையான குடும்பஸ்தர் திங்கட்கிழமை (22) இரவு வீட்டிற்கு திரும்பியபின் ஓய்வெடுத்து தூங்கிகொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (23) காலை 6.30 மணியளவில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
ஆரம்ப விசாரணைகளின்படி கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகித்த மனைவி கோபத்தின் உச்சத்தில் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக காயமடைந்த கணவர் முதலில் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, சந்தேக நபரான 40 வயதுடைய மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.