அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பை கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டது.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மேலதிக சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு தொடங்கி நாட்டில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆரம்பக் கல்வி மூன்று முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
தரம் 1 முதல் 5 வரை உள்ள பாடத்திட்டம் மொத்தம் ஒன்பது பொதுக் கற்றல் துறைகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை: தாய்மொழி, ஆங்கிலம், இரண்டாம் தேசிய மொழி, கணிதம், சமயமும் விழுமியக் கல்வியும், ஆரம்ப விஞ்ஞானம் மற்றும் சூழல் சார்ந்த நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த அழகியற் கல்வி, சுகாதாரமும் உடற் கல்வியும் மற்றும் பாட இணைச் செயற்பாடுகள்.
தரம் 1 முதல் 4 வரை உள்ள வகுப்புகளுக்கான பாடசாலை நேரத்தில் மாற்றம் இல்லை. எனினும், தரம் 5 வகுப்புகளுக்கான நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இருக்கும்.
தரம் 1 மாணவர்களுக்கு பாரம்பரிய பாடப்புத்தகங்களுக்கு பதிலாக, தேசிய கல்வி நிறுவனம் உருவாக்கிய செயற்பாட்டு புத்தகங்கள் (Activity Books) வழங்கப்பட உள்ளன.
தரம் 6 முதல் 9 வரை உள்ள இளையோர் இடைநிலைக் கல்விக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கம் தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வழிகாட்டல் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள அனைத்து மாணவர்களும் 14 கட்டாயப் பாடங்களை கற்க வேண்டும். அதோடு, விளையாட்டு மற்றும் சங்க நடவடிக்கைகளிலும் ஒவ்வொரு மாணவரும் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவார்கள்.
பாடங்கள் “மட்டுக்கள் (Modules)” என்ற வடிவில் கற்பிக்கப்படவுள்ளன. பாடத்திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, ஒவ்வொரு தவணைக்கும் தேவையான மட்டுக்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்.
தரம் 6 முதல் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், வாழ்க்கைக்கான தொழில்நுட்பம், மற்றும் தொழில்முனைவு மற்றும் நிதி கல்வியறிவு ஆகிய மூன்று புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இளையோர் இடைநிலைக் கல்விக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கும். இதில், 50 நிமிடங்கள் கொண்ட ஏழு காலப்பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும், எந்த பாடசாலையும் மூடப்படாது என்றும் பாடசாலைகளை ஒன்றிணைத்து மேம்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.